Monday, November 5, 2012


சூரியன்


ஒன்பது கிரங்களில் சூரியன் முதலாவது கிரகமாகும். சூரியன் மனித உடலில் மூளைக்கும் எலும்புக்கும் அதிபதியாக விளங்குகிறார். சூரியன் ஆண் தன்மையுள்ள கிரகம் என்பதால் இவரால் ஆதிக்கம் செலுத்தப்படும் மனிதர்களிடம் தைரியம், வீரியம், ஆத்ம பலம், விசுவாசம் போன்றவை அதிகமாகக் காணப்படும். இவர் பித்தம் தொடர்பான வியாதிகளையும், உஷ்ண சம்பந்தமான வியாதிகளையும்  ஏற்படுத்துவார்.
 
இவர் பிதுர்க்காரகன் என்று அழைக்கப்படுகிறார். பிதுர் என்றால் தந்தை என்று பொருள். இவரைக் கொண்டு தந்தையைப் பற்றியும், அவருடைய குண நலன்களைப் பற்றியும், அவர் வழி உறவினர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். தந்தை என்ன சொத்து சேர்ப்பார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஓம் என்ற ஓசையில் இருந்து  சூரியன் தோன்றினான் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.
 
காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்று பாரதம் கூறுகிறது. சூரியன் ஏறி வரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. அத்தேரை  ஏழு குதிரைகள் இருக்கின்றன. ஏழு குதி ரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை. இந்தக் குதிரைகளை   ஓட்டுகிற சாரதி அருணன் என்ற பெயருடையவன்.
 
இவன் காலில்லாத நொண்டி. அத்தேர் மேற்கு முகமாக ஓடுகிறது. மேருமலையை வலமாகச் சுற்றி வருகிறது. சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்று  இரு மனைவிகள். எமன், சனி, அசுவினித் தேவர், சுக்கிரீவன், கர்ணன் முதலியோர் மகன்கள். யமுனை, பத்திரை முதலியோர் மகள்கள்.
 
சூரியனை  அருக்கன், ஆதித்தன், கதிரவன், கமலநாயகன், கனலி,  ஞாயிறு, தினகரன், பகலவன்,  பகன், பரிதி, பானு, மார்தாண்டன், வெங்கதிரோன், வெய்யோன் ஆகிய வேறு பெயர்களாலும்  அழைக்கிறார்கள். பாபக் கிரகமான இவர், ஒவ்வொரு ராசியிலும் சுற்றி வர ஒரு மாத காலம் ஆகிறது. அவர் பன்னிரண்டு ராசிகளில் பன்னிரண்டு மாதங்கள் சுற்றி வருகிறார்.
 
அவர் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்சம் பெறுகிறார். வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் பகை பெறுகிறார். ஆனி மாதத்தில்  மீதுன ராசியில் சம பலம் பெறுகிறார்.  ஆடி மாதத்தில் கடக ராசியில் நட்பு பெறுகிறார். ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகிறார்.  புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில்  சம பலம் பெறுகிறார். அவர் ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் நீசமடைகிறார்.
 
கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் நட்பு பெறுகிறார். மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் நட்பு பெறுகிறார். தை மாதத்தில் மகர ராசியில் பகை பெறுகிறார். மாசி மாதத்தில் கும்ப ராசியில் பகை பெறுகிறார். பங்குனி மாதத்தில் மீன ராசியில் நட்பு பெறுகிறார். சூரிய பகவான் நவநாயகர்களிலே  தலைவர், சுபக்கிரகர். மூவகை  நாடிகளிலே பிங்கலை நாடியாகவும், மூவகைக் குணங்களிலே  சாத்வீக குணமாகவும், இருப்பவர்.
 
குலத்திலே சத்திரியர். சிவனது முக்கண்களிலே வலக் கண்ணாக  இருப்பவர். புகழ், மங்களம், உடல் நலம், ஆட்சித்திறம், செல்வாக்கு, முதலியவற்றைக் கொடுப்பவர். சூரியனைச் சிவப்பு மலர்களால் அர்ச்சிப்பதாலும் சிவப்பு  வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும், மாணிக்க  மணியை அணிந்து கொள்வதாலும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாலும், சிவப்பு நிறப் பசுவை தானம் செய்வதாலும், கோதுமை தானியத்தைத் தானம் செய்வ தாலும், சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் சூரியக் கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment